Ministry News
சவுதி அரேபிய இராச்சியத்தில் திரு. அனோஜன் சிவராசாவிற்கு எதிரான வழக்கு முறையாக முடித்து வைக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது
வெளியிடப்பட்ட தேதி

 

சவுதி அரேபிய இராச்சியத்தில் இலங்கைப் பிரஜை திரு. அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கில் மேலதிக நடவடிக்கைகளைத் தொடராமல், வழக்கை முறையாக முடித்து வைக்க சவுதி அரேபிய இராச்சியத்தின் பொது வழக்குத் தொடுநர் தீர்மானித்தமையை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.

திரு. சிவராசா மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக வழக்கை அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு சவுதி அரேபிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 27 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, பொருந்தக்கூடிய சட்ட நடைமுறைகளுக்கு இணங்க மேலதிக விசாரணைக்காக நீதிமன்றம் விடயத்தை பொது வழக்குத் தொடுநருக்கு பாரப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விசாரணை செயன்முறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொது வழக்குத் தொடுநர் மேலதிக நடவடிக்கைகளைத் தொடராமல், வழக்கை முறையாக முடித்து வைக்க தீர்மானித்தார்.

இதன் விளைவாக, திரு. சிவராசா மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த அனைத்து தண்டனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவை இனி அமுலில் இல்லை.

இன்று (2026 நவம்பர் 11), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், திரு. சிவராசாவின் குடும்ப உறுப்பினர்களை அமைச்சில் சந்தித்து, வழக்கு முறையாக முடித்து வைக்கப்பட்டமை உட்பட சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் திரு. சிவராசாவை இலங்கைக்கு திரும்ப அழைத்து வருவதற்கான தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்த செயன்முறை முழுவதும் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்காகவும், சவுதி அரேபிய இராச்சியத்தின் நிறுவப்பட்ட சட்ட மற்றும் நிறுவன செயன்முறைகள் மூலம் அடையப்பட்ட சாதகமான விளைவுகளுக்காகவும் சவுதி அரபு இராச்சிய அரசாங்கத்திற்கும், தொடர்புடைய சவுதி அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

சவுதி சட்ட நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து சட்ட உதவிகளை வழங்குவதற்காக ரியாத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை சட்ட நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளையும், இந்த அமைச்சுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட  ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர ஈடுபாட்டையும் அரசாங்கம் அங்கீகரிக்கிறது. இந்த முயற்சிகள் சவுதி அரேபிய இராச்சியத்தின் இறையாண்மை, சட்ட கட்டமைப்பு மற்றும் நீதித்துறை செயன்முறைகளுக்கு உரிய மரியாதை செலுத்தி, முழு மரியாதையுடன், தொடர்புடைய சவுதி அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

திரு. சிவராசா விரைவில் இலங்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக, தொடர்புடைய சவுதி அதிகாரிகளுடன் அமைச்சு நெருங்கிய ஒருங்கிணைப்பில் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நலன், கண்ணியம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், வெளிநாடுகளில் உள்ள அதன் இராஜதந்திர தூதரகங்கள் மூலம் அதன் குடிமக்களுக்கு சாத்தியமான அனைத்து இராஜதந்திர, சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

2026 நவம்பர் 11

 

Video link 1

Video link 2

Video link 3

Show as Media Release on Homepage