இலங்கை கலாச்சார உறவுகளுக்கான பணிப்பகத்தை நிறுவுதல்
இலங்கை கலாச்சார உறவுகளுக்கான பணிப்பகம், வெளிநாட்டு அலைவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். 'வளமான தேசம் - அழகான வாழ்வு' எனும் தேசியக் கொள்கைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, கலாச்சார இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இலங்கை கலாச்சார உறவுகளுக்கான பணிப்பகமானது, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், கொழும்பில் உள்ள தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள், தொடர்புடைய அரசாங்க நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் இலங்கை புலம்பெயர் சமூகம் ஆகியவற்றுடனான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் மூலம் கலாச்சார இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சின் முதன்மை நிறுவன அமைப்பாகச் செயற்படுகிறது.
இலங்கையின் தனித்துவமான பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைப்பதற்கான சிறந்த தளமொன்றாக இப்பணிப்பகம் செயற்படுகிறது. இதன் மூலம், நமது கலாச்சாரப் பன்முகத்தன்மையானது, அதன் நம்பகத்தன்மையையும், தேசிய அடையாளத்தையும் பேணுவதுடன், உலக அரங்கில் நம்பிக்கையுடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
இந்த முன்னெடுப்பின் மூலம், இலங்கை தனது வளமான கலாச்சாரப் பாரம்பரியங்களை உலகளாவிய கலாச்சார ஒருங்கிணைப்பிற்குப் பங்களிக்கவும், சர்வதேச கலாச்சார இராஜதந்திரத்தில் நாட்டின் இருப்பையும் செல்வாக்கையும் மேலும் வலுப்படுத்தவும் முயல்கிறது.
இலங்கை கலாச்சார உறவுகளுக்கான பணிப்பகத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:
கலாச்சார மையங்களை நிறுவுதல், சர்வதேச தளங்களில் இலங்கை கலைஞர்கள் மற்றும் நிகழ்த்துனர்களை ஆதரித்தல், மற்றும் உலகளாவிய கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம், மென்பலத்தைக் கட்டியெழுப்பவும் பரஸ்பர புரிதலை வளர்க்கவும் கலாச்சாரப் பரிமாற்றங்களை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளில் இலங்கை கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.
இலங்கை மற்றும் பிற நாடுகளின் மக்களுக்கு இடையே முறையான பரஸ்பர புரிதல் என்பது இராஜதந்திரத்தை நடத்துவதற்கான ஒரு அத்தியாவசிய முன்நிபந்தனை என்பதை அங்கீகரித்தல்.
விளையாட்டுப் பரிமாற்றங்கள் மூலம் பிற நாடுகளுடன் உறுதியான உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஒரு அடித்தளமாக விளையாட்டு இராஜதந்திரத்தைப் பயன்படுத்துதல்.
கணிசமான இலங்கை புலம்பெயர்ந்தோர் வசிக்கும் நாடுகள் மற்றும் கணிசமான சுற்றுலாப் பயணிகள் வருகையை ஏற்படுத்தும் நாடுகளுடன் குறிப்பிட்ட கலாச்சார வாரங்கள்/மாதங்களைத் தொடங்குதல்.

