
பேரிடர் நிவாரணம் தொடர்பான 24வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் இடைக்காலக் கூட்டம் (ARF ISM on DR), பங்களாதேஷின் ஏற்பாட்டில், 2026, ஏப்ரலில் இணையவழியாக நடைபெற்றது. இதில் பங்களாதேஷுடன் இலங்கையும் வியட்நாமும் இணைத்தலைமை வகித்தன.
இலங்கையை பிரதிநிதிதித்துவம் செய்த இணைத்தலைவரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகமுமான சமரி ரொட்ரிகோ, தனது தொடக்க உரையில், தேசியத் திறன்களை வலுப்படுத்துதல், குடிமை-இராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஒத்துழைப்பு வழிமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு நீடித்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இணைத் தலைவர் என்ற முறையில், அவர் இரண்டு நிகழ்ச்சி நிரல்களையும் நெறியாழ்கை செய்தார்.
பேரிடர் முகாமைத்துவ மையம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய இலங்கைத் தூதுக்குழு, தித்வா புயலின் போது இலங்கையின் அனுபவங்களை எடுத்துரைக்கும் இரண்டு விளக்கக்காட்சிகளை காட்சிப்படுத்தியது. இந்த விளக்கக்காட்சிகள், குடிமை-இராணுவ ஒத்துழைப்பு, தேசிய மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடரைத்தொடர்ந்த மீட்பு முயற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தின. மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு வழிமுறைகள் மற்றும் மேலும் நெகிழ்வான நிதி அணுகுமுறைகள் மூலம் பேரிடர் மீட்புப் பணிகளுக்கான (ARF) கட்டமைப்பிற்குள் பேரிடர் மீட்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இலங்கை வலியுறுத்தியது.
இந்தக் கூட்டத்தில், 2024–2027 ஆம் ஆண்டுக்கான ஆசியான் பிராந்திய மன்றத்தின் பேரிடர் நிவாரணப் பணித் திட்டம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், திறன் மேம்பாடு, தொழில்நுட்பப் புத்தாக்கம், தகவல் பகிர்வு, முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்ததுடன், 2026–2036 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மணிலா செயற்பாட்டுத் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இலங்கை, வங்கதேசம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையில் நடைபெற்ற, பேரிடர் நிவாரணம் தொடர்பான தொடர்ச்சியான மூன்றாவது மற்றும் இறுதி அமர்வுகளுக்கு இடையிலான கூட்டம் இதுவாகும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026, மே 20

