
பங்களாதேஷ் மக்கள் குடியரசின் வெளிநாட்டு அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ ஹுமாயூன் கோபிர், 2026 நவம்பர் 18ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின்போது, இராஜாங்க அமைச்சர் ஹுமாயூன் கோபிர், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்ததுடன், 2027ஆம் ஆண்டில் பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பினையும் விடுத்தார்.
இராஜாங்க அமைச்சர் கோபிர், பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவையும் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, இரு நாடுகளினதும் பொருளாதாரங்களில் இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்துதல் மற்றும் கல்வி முறைமைகளின் மாறிவரும் தேவைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இரு அரசாங்கங்களினதும் தொலைநோக்குப் பார்வைகளில் காணப்படும் ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 'தூய்மையான இலங்கை' மற்றும் 'பிரஜா சக்தி' ஆகிய முன்முயற்சிகளைப் பாராட்டினார். வறுமையை ஒழித்தல், சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட பங்களாதேஷின் 'விவசாயிகள் அட்டை' மற்றும் 'குடும்ப அட்டை' போன்ற முன்முயற்சிகளுடன் இவை ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் பல்தரப்பு அரங்குகளில் நெருக்கமான ஒத்துழைப்பை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இதுவரை பயன்படுத்தப்படாத வாய்ப்புகளை வெளிக்கொணரும் வகையில், நிறுவனம்சார் கட்டமைப்புகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு இரு அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உருவாகிவரும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், 2027 ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள 'Sri Lanka EXPO 2027 ' கண்காட்சியில் பங்கேற்பதற்கும், பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் ஹேரத் அழைப்பு விடுத்தார்.
பாதுகாப்பு, மீன்பிடி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி உள்ளிட்ட கல்வி, அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல், விருந்தோம்பல் துறையில் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் பரிமாற்றங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றின் ஊடாக சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர். இலங்கையின் இலவச சுற்றுலாபயணிகளுக்கான வீசா திட்டத்தில் பங்களாதேஷையும் உள்ளடக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளினதும் இராஜதந்திரிகளுக்கிடையிலான பரிமாற்றங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இக்கலந்துரையாடல்களில் வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பைத் தொடர்ந்து, கட்டமைக்கப்பட்ட இருதரப்பு ஈடுபாட்டிற்கான நிறுவனம்சார் பொறிமுறையை மேம்படுத்தும் வகையில், விரிவான ஒத்துழைப்புக்கான இலங்கை – பங்களாதேஷ் கூட்டுக் கலந்தாய்வு ஆணைக்குழுவை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கைச்சாத்திட்டனர்.
இராஜாங்க அமைச்சர் கோபிருடன் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சலாஹுதீன் மஹ்மூத், பங்களாதேஷ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டனர். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ, பதில் மேலதிகச் செயலாளர் (தெற்காசியா மற்றும் சார்க்) வருணி முத்துகுமாரண மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2026 நவம்பர் 19











