மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் குழுவானது (CRPD Committee), தனது 35வது அமர்வின் போது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பிலான சமவாயத்தின் (CRPD) கீழ் இலங்கை சமர்ப்பித்த தொடக்க அறிக்கையை 2026 ஆகஸ்ட் 14 அன்று ஜெனீவாவில் மீளாய்வு செய்யவுள்ளது.
இந்த மீளாய்வானது, இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவிற்கும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் குழுவிற்கும் (CRPD Committee) இடையிலானதொரு கலந்துரையாடல் வடிவில் நடைபெறும். தூதுக்குழுவின் உறுப்பினர்கள் ஜெனீவாவில் நேரடியாகவும், கொழும்பிலிருந்து மெய்நிகர் வாயிலாகவும் இதில் பங்கேற்பார்கள்.
மீளாய்விற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமை தாங்குவார்.
ஜெனீவாவில் நேரடியாகப் பங்கேற்கும் தூதுக்குழுவில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தின் அதிகாரிகளும் இடம்பெறுவார்கள்.
கொழும்பிலிருந்து மெய்நிகர் வாயிலாகப் பங்கேற்கும் தூதுக்குழுவில், பிற தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள்.
இலங்கையானது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தை (CRPD) 2016 இல் அங்கீகரித்து, அக்டோபர் 2019 இல் அந்த உடன்படிக்கையின் கீழ் தனது தொடக்க அறிக்கையைச் சமர்ப்பித்தது. 2025, டிசம்பரில், குழுவின் பிரச்சினைகள் பட்டியலுக்கு இலங்கை பதிலளித்து, மேலதிகத் தகவல்களை வழங்கியது. இந்த மீளாய்வானது, இலங்கை அரசாங்கத்திற்கும், குழுவிற்கும், உடன்படிக்கையை இலங்கை செயற்படுத்திய விதத்தை மதிப்பீடு செய்வதற்கும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
ஜெனீவாவில், 2026, ஆகஸ்ட் 12 முதல் 27 வரை நடைபெறும் குழுவின் 35வது அமர்வின் போது, இலங்கை, சுலோவாக்கியா, கட்டார், லித்துவேனியா மற்றும் சிலி ஆகிய நாடுகளுடன் சேர்த்து பரிசீலிக்கப்படும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஆகஸ்ட் 13

