பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள மக்களுக்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, மேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், நேபாளத்தின் தற்போதைய மனிதாபிமான மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
பேரழிவினால் ஏற்பட்ட துரதிஷ்டமான உயிரிழப்புகள் மற்றும் துயரங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக நேபாள அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமைப் பிணைப்புகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அவசியமிக்க இந்த நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தினார். இந்த நிதிசார் பங்களிப்பு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்று அதிகாலையில், வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத், தனது நேபாள சக வெளிநாட்டு அமைச்சர் ஷிசிர் கனலுடன் தொலைபேசியில் பேசியபோது, நேபாளத்திற்கு இலங்கையின் இரங்கலையும், உறுதியான ஆதரவையும், ஒற்றுமையையும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம், நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்பதோடு, நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கை பங்களிக்கக்கூடிய பொருத்தமான வழிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026 ஆகஸ்ட் 27


