Ministry News
2026 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கை: பங்காளித்துவத்தை மேம்படுத்தி வாய்ப்புகளை உருவாக்குதல்
வெளியிடப்பட்ட தேதி
img1

2026 நவம்பர் 1 முதல் 4 வரை அன்டிகுவா மற்றும் பார்புடாவின் சென் ஜோன்ஸில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM 2026) தீவிரமாகப் பங்கேற்றதன் மூலம், பொதுநலவாய நாடுகளுடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. “செழுமையான பொதுநலவாயத்திற்கான பங்காளித்துவம் மற்றும் முதலீடுகளைத் துரிதப்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கைத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கினார்.

பொதுநலவாயத்தின் 56 உறுப்பு நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களை ஒன்றிணைத்த இம்மாநாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் மாற்றம், காலநிலை மீள்தன்மை மற்றும் இளைஞர் வலுவூட்டல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்தது. இலங்கையின் பங்கேற்பானது, பொதுநலவாய நாடுகளுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதுடன், நாட்டின் இராஜதந்திர, பொருளாதார மற்றும் அபிவிருத்தி முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

தனது உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற ஆரம்ப நிகழ்விலும், நிறைவேற்று அமர்வுகளிலும் பங்கேற்றதுடன், நவம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் காலை உணவுக் கூட்டத்திலும் தலைவர்களின் தனிப்பட்ட கலந்துரையாடலிலும் பங்கேற்றார். நவம்பர் 2ஆம் திகதி, பொதுநலவாய மகளிர் மன்றம், கண் சுகாதாரத்திற்கான உலகளாவிய உச்சிமாநாடு மற்றும் பொதுநலவாய வர்த்தக மன்றத்தின் பொதுநலவாயத் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான உச்சிமாநாடு ஆகியவற்றின் உயர்மட்ட அமர்வுகளில் உரையாற்றிய அவர், இலங்கையின் சாதனைகள், கொள்கை முன்முயற்சிகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

பொதுநலவாய மகளிர் மன்றத்தின் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய பிரதமர், “பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல்: செழுமையான மற்றும் மீள்தன்மை கொண்ட பொதுநலவாயத்திற்கான முதலீடு” என்ற தொனிப்பொருளின் கீழ், மீள்தன்மை கொண்ட சமூகங்களைக் கட்டியெழுப்புவதிலும் நிலைபேறான அபிவிருத்தியை அடைவதிலும் பெண்களின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

கண் சுகாதாரத்திற்கான உலகளாவிய உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கண் பராமரிப்புச் சேவைகளை சமத்துவமான முறையில் அணுகுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். பாடசாலை மட்டத்திலான பார்வைத் திறன் பரிசோதனைத் திட்டங்கள் மற்றும் தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல் உள்ளிட்ட நாட்டின் பொதுச் சுகாதார முயற்சிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

பொதுநலவாயத் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் முதலீட்டுச் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்ததுடன், பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். அவையாவன, காலநிலை மீள்தன்மை கொண்ட விவசாயச் சூழல் தொகுதிகள் (CRAES) திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பூச்சிய உமிழ்வு துறைமுக ஏற்பாட்டியல் திட்டமான “GreenPort Cornerstone” ஆகியவையாகும். இத்திட்டங்களை ஆராய்ந்து, முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுநலவாய வர்த்தகத் தலைவர்களுக்கும் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்று அமர்வுகளின்போது, பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்துதல், காலநிலை நிதியைத் திரட்டுதல், நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவித்தல் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்களில் பிரதமர் பொதுநலவாயத் தலைவர்களுடன் இணைந்து பங்கேற்றார். குறிப்பாக, சிறிய மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் அபிவிருத்திச் சவால்களை எதிர்கொள்வதில், பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான மேம்படுத்தப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டுப் பங்காளித்துவம் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.   

மாநாட்டின் இடைநிகழ்வாக, பொதுநலவாய உறுப்பு நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பிரதமர் தொடர்ச்சியான இருதரப்புச் சந்திப்புகளை நடத்தினார். இச்சந்திப்புகளில் ருவாண்டா ஜனாதிபதி மேன்மைதங்கிய போல் ககாமே; ஜமைக்கா பிரதமர் கலாநிதி அன்ட்ரூ ஹோல்னஸ்; மாலைதீவின் உப ஜனாதிபதி மேன்மைதங்கிய உஸ். ஹுசைன் மொஹமட் லதீப்; கென்யாவின் பிரதி ஜனாதிபதி பேராசிரியர் கிதுரே கிந்திகி மற்றும் உகண்டாவின் நீதி மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் அமைச்சர் நோர்பர்ட் மாவோ ஆகியோர் அடங்குவர்.

மேலும், சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சருமான கேன் கிம் யோங்; மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம்; நமீபியாவின் பிரதமர் கலாநிதி த்ஜிதுங்கா எலிஜா ங்குராரே; சீஷெல்ஸின் முதன்மை அமைச்சரும் மீன்பிடி, விவசாயம் மற்றும் நீலப் பொருளாதார அமைச்சருமான வாலஸ் கொஸ்குரோ; தான்சானியாவின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் கிழக்கு ஆபிரிக்க ஒத்துழைப்பு அமைச்சர் தூதுவர் மஹ்மூத் தாபித் கொம்போ மற்றும் பங்களாதேஷின் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஹுமாயுன் கொபீர் ஆகியோருடனும் பிரதமர் கலந்துரையாடல்களை நடத்தினார்.

இந்தச் சந்திப்புகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, 2027 ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை எக்ஸ்போ 2027 கண்காட்சியில் சர்வதேசப் பங்கேற்பை விரிவுபடுத்துவது அமைந்தது. இக்கண்காட்சியில் பங்கேற்பதற்காகத் தத்தமது நாடுகளின் வர்த்தகத் தூதுக்குழுக்களை ஊக்குவிக்குமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், இதன் மூலம் இலங்கையுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகப் பங்காளித்துவங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் வலியுறுத்தினார்.

பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையின் (CWEIC) தலைவர் லோர்ட் மார்லண்ட் மற்றும் உலகளாவிய ரீதியில் முன்னணி வகிக்கும் குவாண்டம் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனமான IonQ நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக்கோலோ டி மாசி ஆகியோருடனும் மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இச்சந்திப்புகளின்போது, இலங்கையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் வணிகப் பங்காளித்துவங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன.

அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக, தலைவர்களின் கலந்துரையாடல்களுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் நோக்கில், நவம்பர் 2ஆம் திகதி பொதுநலவாய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் கூட்டம் (Pre-CHOGM CFAMM) நடைபெற்றது. இலங்கையின் தூதுக்குழுவின் தலைவராக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தனது உரையின்போது, பொதுநலவாயத்திற்கான செயற்பாட்டு நோக்கிலான எதிர்காலப் பாதையொன்றை முன்மொழிந்த அவர், பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதாரப் பங்காளித்துவங்களை வலுப்படுத்துதல், சந்தை அணுகலுக்கான தடைகளை நீக்குதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

CHOGM 2026 ஆனது, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் கூட்டறிக்கை (CHOGM Communiqué) ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நிறைவடைந்தது. இதன் மூலம், வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்துதல், வர்த்தகத் தடைகளை நீக்குதல், மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளைக் கட்டியெழுப்புதல், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல், காலநிலை நிதி மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துதல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்தை முன்னெடுத்தல், பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான தமது உறுதிப்பாட்டைத் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ஊடாக இழப்பீட்டு நீதியை முன்னெடுத்தல் தொடர்பிலும் கூட்டறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவமும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

2030ஆம் ஆண்டளவில் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி 2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை எட்டுவதற்கான இலட்சிய இலக்கு முக்கியமான பெறுபேறுகளில் ஒன்றாக அமைந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இளைஞர்களின் திறன் மேம்பாடு, வர்த்தக விரிவாக்கம் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான புதிய பங்காளித்துவங்கள் மற்றும் நிதியுதவிகளைத் திரட்டுவதையும் தலைவர்கள் வரவேற்றனர். சர்வதேசச் சந்தைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கு, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வசதியளிக்கும் தளமாக பொதுநலவாய வர்த்தக இணையவாயில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டமை மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மேலும், கண் சுகாதாரத்திற்கான உலகளாவிய உச்சிமாநாட்டின் ஊடாக, கண் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், கண் பராமரிப்புச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அரசாங்கங்களிடமிருந்து 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி குறித்த உறுதிமொழிகள் பெறப்பட்டன.

2026 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கையின் பங்கேற்பானது, பல்தரப்பு ஒத்துழைப்பு, ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தளமாக பொதுநலவாயத்திற்கு இலங்கை அளிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இவ்விஜயம், இராஜதந்திர உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கும், புதிய பொருளாதாரப் பங்காளித்துவங்களை ஆராய்வதற்கும், இலங்கையின் முதலீட்டுச் சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கும் பெறுமதிமிக்க வாய்ப்புகளை வழங்கியது. குறிப்பாக, பொதுநலவாயத் தலைவர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடனான ஈடுபாடுகள், இலங்கை எக்ஸ்போ 2027 கண்காட்சிக்கு முன்னதாக சர்வதேச வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தன.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின்  அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ; ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர; ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் திலானி வீரகோன்; வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் ஹிருணி ராஜபக்ஷ மற்றும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சர்வதேச உறவுகள்) பியுமி பண்டார ஆகியோர் பிரதமருடன் இணைந்து இக்கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

2026 நவம்பர் 11

 

Show as Media Release on Homepage