இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகள் 2026 ஜூன் 9 ஆம் திகதி மெய்நிகர் முறையில் நடைபெற்றன. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் பிரெஞ்சு குடியரசின் ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசியா மற்றும் ஓஷனியாவுக்கான பணிப்பாளர் நாயகம் பெனோய்ட் கைடீ ஆகியோர் இக்கலந்தாய்வுகளுக்கு இணை-தலைமை தாங்கினர்.
இக்கலந்தாய்வுகள், இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் சுமுகமான உறவில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாகவும், அண்மைக் காலத்தில் எட்டப்பட்ட உத்வேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்தன. 2023 அக்டோபர் மாதம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளின் முதற்கட்ட அமர்வைத் தொடர்ந்து, இடம்பெற்ற இந்த ஆக்கப்பூர்வமான ஈடுபாடு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகவும், முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் புதிய ஒத்துழைப்புத் துறைகளைக் கண்டறிவதற்குமானதொரு வாய்ப்பாகவும் அமையும் என இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இரு தரப்பினரும் இருதரப்பு உறவுகளின் முழு அளவையும், குறிப்பாக இருதரப்பு அரசியல் ஈடுபாடுகள், கடல்சார் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மற்றும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பு ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். கல்வி மற்றும் மக்கள் பரிமாற்றங்களில் இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தித்வா புயலுக்குப் பிறகு இலங்கைக்கு வழங்கப்பட்ட தாராளமான மனிதாபிமான உதவிகளுக்காக பிரெஞ்சு குடியரசின் அரசாங்கத்திற்கு இலங்கை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.
இலங்கையில் பிரான்ஸின் முதன்மை முதலீடுகள் ஆற்றிய முன்னணிப் பங்கை இரு தரப்பினரும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். பிரெஞ்சு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு நம்பிக்கை வாக்கை அளித்துள்ளனர் என்று பிரெஞ்சு தரப்பு குறிப்பிட்டது. பிரான்ஸ் இலங்கைக்கு வழங்கி வரும் நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கடந்த சில ஆண்டுகளில் பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் சுற்றுலாப்பயணங்கள் அதிகரித்திருப்பதும் பாராட்டப்பட்டது.
பிராந்திய கடல்சார் ஆய்வுகள் மையம் (RCMS) நிறுவப்பட்டதை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இரு தூதுக்குழுக்களும் அங்கீகரித்தன. மேலும், கடல்சார் நிர்வாகத்தில் பிரான்சின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி, இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தன.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், நிலைபேறான கடல்சார் நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும் உள்ள பொதுவான முன்னுரிமைகளை இந்தக் கலந்தாய்வுகள் முன்னிலைப்படுத்தின. இது தொடர்பாக, இலங்கை தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட உயிர்ப்பல்வகைமை (BBNJ) ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை வலியுறுத்தியதுடன், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட உயிர்ப்பல்வகைமை (BBNJ) செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பிரான்ஸின் ஆதரவையும் பாராட்டியது. மேலும், இந்த ஒப்பந்தத்தை திறம்படச் செயற்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான நெருங்கிய ஒத்துழைப்பில் இரு தரப்பினரும் ஆர்வம் தெரிவித்தனர்.
இரு தூதுக்குழுக்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பல்தரப்பு மன்றங்களில் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தங்கள் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தின. ஐக்கிய நாடுகளின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் கோட்பாடுகளை கடைப்பிடிப்பதாக இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
இலங்கைத் தூதுக்குழுவில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும், பிரெஞ்சு குடியரசில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பொறுப்புத் தூதுவர் (Chargé d’ Affaires a.i) மற்றும் தூதரகத்தின் பிற சிரேஷ்ட அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலா அமைச்சு
கொழும்பு
2026, ஜூன் 10




