வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 1 முதல் 3 வரை அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டார்.
இப்பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத், அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான பெனி வோங்குடன் வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கலந்துரையாடினார். மேலும், அமைச்சர் ஹேரத், அவுஸ்திரேலிய பாராளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்ததுடன், சிறு வணிகம், சர்வதேச அபிவிருத்தி மற்றும் பன்முகப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் ஏன் எளி, இந்தியப் பெருங்கடல் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் டிம் வெட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா-இலங்கை பாராளுமன்ற நட்புறவுக் குழு ஆகிய தரப்பினருடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
கலந்துரையாடல்களின் முக்கிய பெறுபேறுகளில் ஒன்றாக, விரிவான பிராந்திய பொருளாதார கூட்டமைப்பில் (RCEP) இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பத்திற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.
அமைச்சர் ஹேரத், விக்டோரியா ஆளுநர் மார்கரட் கார்ட்னர் மற்றும் விக்டோரியா மாநிலத்தின் முதலமைச்சர் ஜசிந்தா எலன் ஆகியோருடனும் சந்திப்புகளை மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் வணிகம் மற்றும் முதலீடு தொடர்பான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, விக்டோரியா மாநில அரசின் வர்த்தக வசதி முகமையான குளோபல் விக்டோரியா நடத்திய இலங்கை – விக்டோரியா தொழில் வட்டமேசை மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். மேலும், வணிக சமூகத்தின் பிரதிநிதிகளுடன் வணிக வலையமைப்பு அமர்வொன்றிலும் பங்கேற்றார்.
கான்பராவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கை சமூகத்தினருடன் கலந்துரையாடியமை, இப்பயணத்தின் ஒரு அம்சமாகும். இது, வெளிநாட்டிலுள்ள இலங்கையருடன் நெருங்கிய உறவுகளை வளர்ப்பதில் அரசாங்கத்தின் ஈடுபாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது.
அமைச்சரின் இப்பயணமானது, தசாப்தமொன்றில், அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரொருவரால் மேற்கொள்ளபட்டுள்ள முதல் உத்தியோகப்பூர்வப் பயணமாகும். அண்மையில்அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட உயர் மட்டப் பயணங்களுடன், பரந்த அளவிலான துறைகளில் இருதரப்பு உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட ஈடுபாட்டைப் பிரதிபலிக்கின்ற மற்றுமொரு நிகழ்வாக இப்பயணம் அமைகிறது.
கான்பராவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர, கிழக்கு ஆசியா மற்றும் ஓசனியாவின் பணிப்பாளர் நாயகம் சாவித்ரி பானபொக்க ஆகியோர் இக்கூட்டங்களின்போது அமைச்சருடன் இணைந்துகொண்டனர். அதே சமயம், விக்டோரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மெல்பர்னில் இலங்கைக்கான கொன்சல் அதிபதி கலந்துகொண்டார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2026 ஜூன் 05


