வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளமான www.mfa.gov.lk, 2026 ஆகஸ்ட் 12 அன்று மொனார்ஷ் இம்பீரியலில் நடைபெற்ற BestWeb.LK 2026 விருது வழங்கும் விழாவில், சிறந்த அரசாங்க இணையதளத்திற்கான வெள்ளி விருதைப் பெற்றது.
BestWeb.LK விருதுகளில் அமைச்சானது, தேசிய அங்கீகாரத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இது அதன் டிஜிட்டல் மாற்றத்திற்கான முக்கியமானதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அமைச்சின் டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துவதிலும், மேலும் பாதுகாப்பானதும், அணுகக்கூடியதும், நம்பகமானதும் மற்றும் பயனர் நட்புரீதியிலானதுமான நிகழ்நிலை தளத்தை உருவாக்குவதிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தை இந்த விருது அங்கீகரித்தது.
இத்தேசிய மட்ட அங்கீகாரமானது, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தொலைநோக்குப் பார்வையையும், வலைத்தள உருவாக்குநரான ஃப்ரன்ட்வோக்கர் (ப்ரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் ஆதரவுடன், வலைத்தளத்தின் திட்டமிடல், உருவாக்கம், உள்ளடக்கத் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, மதிப்பாய்வு, சோதனை மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட அமைச்சக அதிகாரிகளின் கூட்டு முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
lk டொமைன் பதிவகத்தால் நடத்தப்படும் BestWeb.LK, இலங்கையின் முதன்மையான வலைத்தளங்களுக்கிடையிலான போட்டியாகும். இது வலைத்தள வடிவமைப்பு, தொழில்நுட்ப செயலாற்றுகை, உள்ளடக்கம், பயனர் அனுபவம், அணுகல்தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கிறது. சிறந்த அரசாங்க வலைத்தளத்திற்கான பிரிவானது, பொதுமக்களுக்குத் தகவல்களையும் சேவைகளையும் திறம்பட வழங்குவதை வெளிப்படுத்தும் பொதுத்துறை வலைத்தளங்களை அங்கீகரிக்கிறது.
2026, மே 18 அன்று தொடங்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட அமைச்சின் இணையத்தளம், பொது இணையதளத்திற்கான தள அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இத்திட்டம், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களையும், பணியகங்களையும் ஒரு பாதுகாப்பானதும், தரப்படுத்தப்பட்டதும் மற்றும் மையப்படுத்தப்பட்டதுமான டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தளம், உத்தியோகப்பூர்வ தகவல்களின் துல்லியத்தையும், நிலைத்தன்மையையும் மேம்படுத்தவும், அணுகல்தன்மை மற்றும் இணையதளப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மேலும் தகவல்களையும் சேவைகளையும் திறமையாக வழங்குவதை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கைத் தூதரக மற்றும் பணியக இணையதளங்களையும் ஒருங்கிணைந்ததும், திறமையானதும், அணுகக்கூடியதும் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்டதுமான டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன், அமைச்சானது தனது டிஜிட்டல் இருப்பைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், 2026, ஆகஸ்ட் 31 இற்குள் பொது இணையதளத்திற்கான தள அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்வதற்கும் உறுதிபூண்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஆகஸ்ட் 20





