
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 நவம்பர் 27ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மன்றக் கூட்டத்தில் இலங்கைத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
2023 முதல் 2025 வரை IORA தலைமைப் பொறுப்பை வகித்த இலங்கை, முன்னாள் தலைமை நாடு என்ற வகையிலும், IORA முக்கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற வகையிலும் இக்கூட்டத்தில் பங்கேற்றது. இம்முக்கூட்டமைப்பில் தற்போதைய தலைமை நாடான இந்தியாவும், துணைத் தலைமை நாடான மொரீஷியஸும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில், “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புத்தாக்கம், திறந்த நிலை, மீள்திறன் மற்றும் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல்” என்ற இந்தியாவின் தலைமைத்துவக் கருப்பொருளின் கீழ் இக்கூட்டம் நடைபெற்றது. IORA உறுப்பு நாடுகள், உரையாடல் பங்காளி நாடுகள் மற்றும் IORA செயலகத்தின் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, சங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் எதிர்காலப் பாதை குறித்து கலந்துரையாடினர்.
2025 மே மாதத்தில் இலங்கை தலைமையில் நடைபெற்ற 24ஆவது அமைச்சர்கள் மன்றக் கூட்டத்திலிருந்து இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களை அமைச்சர்கள் மீளாய்வு செய்தனர். அக்கூட்டத்தில் கொழும்பு பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாறிவரும் உலகளாவிய மற்றும் பிராந்திய சூழலில் IORA அமைப்பின் பொருத்தப்பாடு, செயற்திறன் மற்றும் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக, 2027 மார்ச் மாதத்தில் சங்கம் தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் இவ்விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.
உடனடி முன்னாள் தலைமை நாடு என்ற வகையில் உரையாற்றிய அமைச்சர் ஹேரத், இலங்கையின் தலைமைத்துவக் காலப்பகுதியை நினைவுகூர்ந்ததுடன், IORA தலைமைப் பொறுப்பு அனைத்து உறுப்பு நாடுகளின் சார்பாக நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்படும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார். சங்கத்தின் செயற்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், கடல்சார் பாதுகாப்பு, மீன்பிடி வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் மீள்திறன் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புகள், குறிப்பாக மீனவர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் கரையோர சமூகங்கள் உள்ளிட்ட பிராந்திய மக்களுக்கு நடைமுறை ரீதியான நன்மைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை எதிர்கொள்ளும் சிக்கலானதும் ஒன்றோடொன்று தொடர்புடையதுமான சவால்களுக்கு, உறுப்பு நாடுகளிடையே தொடர்ச்சியான கூட்டு அர்ப்பணிப்பு, நடைமுறை ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு அவசியம் என அமைச்சர் ஹேரத் மேலும் குறிப்பிட்டார். IORA முன்னெடுப்புகள் பிராந்திய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமுள்ளதும், நடைமுறை ரீதியான விளைவுகளை வழங்குவதனை உறுதிப்படுத்துவதுமான உறுப்பு நாடுகள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
25ஆவது அமைச்சர்கள் மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், கூட்டத்தின் இடைவேளையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர்.
அமைச்சர்கள் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக, 2026 நவம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் IORA சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் (CSO) 29ஆவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அமைச்சர்கள் சபையில் பரிசீலிக்கப்பட வேண்டிய விடயங்களும் தயாரிக்கப்பட்டன. இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஹிமாலி அருணதிலக தலைமை தாங்கினார்.
IORA இன் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை தொடர்ந்தும் செயலூக்கத்துடன் பங்காற்றி வருகின்றது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி முகாமைத்துவம் ஆகிய முன்னுரிமைப் பகுதிகளுக்கான ஒருங்கிணைப்புத் தலைமை நாடாக இலங்கை தனது பொறுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், IORA உரையாடல் பங்காளி நாடான தென் கொரியாவிற்கான ஒருங்கிணைப்பு நாடாகவும் இலங்கை செயற்படுவதுடன், IORA கட்டமைப்பின் கீழ் தென் கொரியாவுடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கின்றது.
அமைச்சர்கள் சபைக் கூட்டத்தின் பக்க நிகழ்வாக, அமைச்சர் ஹேரத் இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளின் அமைச்சர்களுடனும், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதுக்குழுத் தலைவர்களுடனும் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தினார். இக்கலந்துரையாடல்கள் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் தொடர்பில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் வாய்ப்பளித்தன.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026 நவம்பர் 28






