Ministry News
சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினத்தை முன்னிட்டு இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக "லங்காகனெக்ட்" புகார் முகாமைத்துவத்திற்கான கைப்பேசிச் செயலி அறிமுகம்
வெளியிடப்பட்ட தேதி
img1

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவற்றுடன் இணைந்து, இன்று (2026 ஜூன் 16), உலகெங்கிலும் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், புகார் முகாமையை மேம்படுத்தவும், மற்றும் துணைச் சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட "லங்காகனெக்ட்" என்ற புகார் முகாமைத்துவச் செயலியை (CMA) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து, சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினத்தை நினைவுகூர்ந்தது.

இச்செயலியை, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், கொழும்பில் நடைபெற்ற ஒரு விழாவில் அறிமுகம் செய்தார். இவ்விழாவில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர்  கௌரவ அருண் ஹேமச்சந்திர, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுக்குரிய பணிப்பாளர் ஜொனி சிம்ப்சன், தூதரகங்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொண்டனர். மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் மெய்நிகர் முறையில் இணைந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுப் பங்களிப்பின் மூலம், ஸ்ரீ லங்கா  டெலிகொம் (SLT) வழங்கிய தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்ட “லங்காகனெக்ட்” கைப்பேசிச் செயலியானது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாம் எந்த நாட்டில் பணிபுரிந்தாலும், புகார்களையும் உதவிக்கான கோரிக்கைகளையும் சமர்ப்பிக்கவும், தங்கள் வழக்குகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அத்தியாவசியத் தகவல்கள் மற்றும் ஆதரவு சேவைகளைப் பெறவும் மையப்படுத்தப்பட்டதும், பயன்படுத்த எளிதானதுமான டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது.

இச்செயலியானது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கொன்சியூலர் பிரிவு, மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களின் புகார் முகாமைத்துவச் செயன்முறைகளை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைப்பதன் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்பில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒரு இடைவெளியை நிவர்த்தி செய்கிறது. இந்த ஒருங்கிணைந்த தளம், நிறுவன ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது, மையப்படுத்தப்பட்ட வழக்கு மேலாண்மை மற்றும் கண்காணிப்பை எளிதாக்குகிறது, மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் எழுப்பப்படும் புகார்கள் மற்றும் நலன் சார்ந்த குறைகளுக்கு சரியான நேரத்தில், பயனுறுதிமிக்கதும், ஒருங்கிணைந்ததுமான பதில்களை வழங்க உதவுகிறது.

தொடக்கத்தில் டிஜிட்டல் புகார் முகாமைத்துவ பொறிமுறையொன்றாகக் கருத்தாக்கம் செய்யப்பட்ட “லங்காகனெக்ட்”, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளிடையே நடைபெற்ற விரிவான கலந்தாய்வுகளின் மூலம், பரந்த இலங்கை புலம்பெயர் சமூகத்திற்குச் சேவை வழங்கும் ஒரு முழுமையான டிஜிட்டல் தளமாகப் பரிணமித்தது. புகார் முகாமைத்துவத்திற்கு மேலதிகமாக, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அத்தியாவசியத் தகவல்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை இச்செயலி வழங்குகிறது. இதன்மூலம், அவர்கள் தங்கள் புலம்பெயர்வுப் பயணம் முழுவதும் அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்திருக்க வழிசெய்கிறது.

கூகில் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் எப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் இலவசமாகக் கிடைக்கும் “லங்காகனெக்ட்”-இன் வெளியீடானது, டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், குடிமக்களை மையமாகக் கொண்ட பொதுச் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கமயமானதும், எளிதில் அணுகக்கூடியதுமான டிஜிட்டல் தீர்வுகள் மூலம் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாதுறை அமைச்சு

கொழும்பு

 

 

2026 ஜூன் 16

 

img3

 

img2

 

Show as Media Release on Homepage