Ministry News
அஜர்பைஜானில் நடைபெறவுள்ள 7-வது CICA உச்சிமாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தலைமை
வெளியிடப்பட்ட தேதி

அஜர்பைஜானின் பாகு நகரில் 2026 அக்டோபர் 14-15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 'ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின்' (CICA) 7-வது உச்சிமாநாட்டில், இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கவுள்ளார்.

"வலுவானதொரு ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மாநாடு: ஆசியாவில் இணைப்புத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலைபேறான வளர்ச்சி" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், அமைச்சர் ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

இப்பயணத்தின் போது, ​​கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அமைச்சர்களுடன், ஏற்பாட்டு நாடான அஜர்பைஜானின் தலைவர்கள் மற்றும் CICA-வின் செயலாளர்நாயகம் ஆகியோருடன் அமைச்சர் ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார்.

தெற்காசியா, தென்கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த 28 உறுப்பு நாடுகளின் அரச மற்ற்றும் அரசாங்கத் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் அஜர்பைஜானில் நடைபெறவுள்ள இந்த 7-வது CICA உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்த ஆசியக் கண்டத்துடனான உறவுகளை வலுப்படுத்தவும், மத்திய ஆசியாவின் துரிதமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் புதிய பொருளாதாரக் கூட்டணிகளை உருவாக்கவும் இப்பயணம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பிராந்திய அரசுகளுக்கிடையிலான மன்றமாக CICA திகழ்கிறது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

13 அக்டோபர் 2026

Show as Media Release on Homepage