
தாய்லாந்தின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜுலாபுன் அமோர்ன்விவாட் (Julapun Amornvivat) விடுத்த அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 செப்டம்பர் 14 முதல் 16 வரை தாய்லாந்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார்.
இந்த இரண்டு நாள் விஜயத்தின் போது, அமைச்சர் ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழிலாளர் துறை அமைச்சர் அமோர்ன்விவாட் ஆகியோர், தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் (MoA) ஆகியவற்றில் கைச்சாத்திட்டனர்; இதன் மூலம் இலங்கைத் தொழிலாளர்களுக்கு 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள், தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் வேலைக்கு அமர்த்துவதற்குமான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதுடன், அவர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழிவகுக்கின்றன. மேலும், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான இடங்களை பன்முகப்படுத்துவதற்கும், திறன்சார்ந்ததும், கண்ணியமானதுமான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை மக்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த ஒப்பந்தங்கள் பெரிதும் பங்களிக்கின்றன.
அமைச்சர் ஹேரத், தாய்லாந்தின் பதிற்கடமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சரூன் சரோன்சுவானுடன், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள் மற்றும் சுற்றுலா, கல்வி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற பயணத்தை எளிதாக்கும் நோக்கில், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான முன்மொழியப்பட்ட இருதரப்பு வீசா விலக்கு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளும் இந்தக் கலந்துரையாடலில் அடங்கியிருந்தன.
தனது உத்தியோகபூர்வ திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஹேரத் தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரசபையின் (TAT) ஆளுநருடன் கலந்துரையாடினார். அப்போது, தாய்லாந்தின் அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத் தள மேம்பாடு குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுற்றுலாத்துறைசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், சுற்றுலாத் தள மேம்பாட்டிற்கான புத்தாக்க அணுகுமுறைகள், தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துதல் குறித்த பெறுமதிமிக்க நுண்ணறிவுகளை இச்சந்திப்பு வழங்கியது.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் உள்ள வணிக வாய்ப்புகளை அடையாளம் காண்பது மற்றும் இரு நாடுகளின் வணிகச் சமூகத்தினரிடையே நெருக்கமான தொடர்புகளை ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களுடன், தாய்லாந்தின் முன்னணி தனியார் துறை வணிகத் தலைவர்களுடனான சந்திப்புகளும் அமைந்தன.
சுற்றுலா, வேலைவாய்ப்பு, குடிபெயர்வு மற்றும் தொழிலாளர் நடமாட்டம் ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும் இந்த விஜயம் வாய்ப்பளித்தது.
இந்த விஜயத்தின்போது, தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் விஜயந்தி எதிரிசிங்க மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் ஆகியோர் அமைச்சர் ஹேரத் உடன் இணைந்திருந்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2026 செப்டம்பர் 18






