Ministry News
வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் அஜர்பைஜான் உத்தியோகப்பூர்வ பயணம் நிறைவு
வெளியிடப்பட்ட தேதி

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஆசியாவில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகள் மாநாட்டின் (CICA) 7வது உச்சி மாநாட்டிற்கான இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி, அசர்பைஜானின் பாகுவில் மேற்கொண்ட தனது இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்.

அசர்பைஜானின் தலைமையில் 2026 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, மேம்படுத்தப்பட்ட இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் 'வலுவான CICA'-வை உருவாக்குவது குறித்து ஆலோசிப்பதற்காக, 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், உப ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்களை ஒன்றிணைத்தது.

இலங்கையின் அறிக்கையை வழங்கிய அமைச்சர் ஹேரத், "வலுவான CICA: ஆசியாவில் இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைபேறான வளர்ச்சி" என்ற CICA கருப்பொருளை வரவேற்றார். மேலும், ஆசியா முழுவதும் அர்த்தமுள்ள பொருளாதார ஒருங்கிணைப்பு என்பது உறுப்பு நாடுகளிடையே வலுவான இணைப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நெருங்கிய கூட்டாண்மை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த உச்சிமாநாடானது, 'பாகு பிரகடனம்' ஏற்றுக்கொள்ளப்பட்டமை, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு முழு உறுப்பினராக இணைந்தமை, அஜர்பைஜானின் தலைமைப் பதவி (2026 இலிருந்து 2028 வரை) நீட்டிக்கப்பட்டமை மற்றும் சுல்தான் ஹஜியேவ் CICA-வின் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டமை ஆகிய நிகழ்வுகளுடன்  நிறைவடைந்தது.

இந்தப் பயணத்தின் போது தனது உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஹேரத் 'ஜுகுல்பா அரண்மனையில்' அஜர்பைஜானின் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். மேலும், அவர் அஜர்பைஜான், பஹ்ரைன், தஜிகிஸ்தான், துருக்கியே மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், CICA-வின் செயலாளர் நாயகமும், தூதுவருமாகிய கைரத் சாரிபேயுடனும் கலந்துரையாடினார். வர்த்தகம், சுற்றுலா, விவசாயம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

அசர்பைஜான் ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எரிசக்தி ஒத்துழைப்புக்கான மூலோபாய வாய்ப்புகளை ஆராய்வதற்காக, அசர்பைஜானின் முன்னணி எரிசக்தி நிறுவனமான ‘SOCAR’ உடன் ஒரு உயர்மட்ட வர்த்தகக் கூட்டம் கூட்டப்பட்டது.

அமைச்சர் ஹேரத்துடன், அசர்பைஜானுக்கான அங்கீகாரத்துடன் ஈரானுக்கான இலங்கைத் தூதுவரும், பேராசிரியருமான ஃபஸீஹா அஸ்மி மற்றும் அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் சமரி ரொட்ரிகோ ஆகியோர் தூதுக்குழுவின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.

இந்தப் பயணம், CICA உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், அதன் உறுப்பு நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கும் இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், ஆசியா முழுவதும் பிராந்திய இணைப்பு, எண்ணிம மாற்றம் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், வர்த்தகம், சுற்றுலா, விவசாயம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த சந்திப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டின.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

20 அக்டோபர் 2026

 

 

 

Show as Media Release on Homepage