வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையுடன் இணைந்து, 2026 ஆகஸ்ட் 26 முதல் 28 வரை மேற்கொள்ளும் வகையில், தூதரகப் பிரதிநிதிகளுக்கான கண்டியை நோக்கிய சிறப்புச் சஞ்சாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இப்பயணத்தின் மூலம், அவர்கள் கண்டி எசல பெரஹேராவைக் கண்டுகளிக்கவும், இலங்கையின் செழுமையான சமய மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளவும் இச்சஞ்சாரம் வாய்ப்பாக அமைந்தது.
கொழும்பை தளமாகக் கொண்ட தூதரகத் தலைவர்கள், புதுடில்லியை வதிவிடமாகக் கொண்ட மற்றும், இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்கள், அவர்களது துணைவியர் மற்றும் ஏனைய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 70 தூதரகப் பிரதிநிதிகள் இந்த மூன்று நாள் சஞ்சாரத்தில் பங்கேற்றனர்.
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் கீழ் இயங்கும், உயர் கல்வி நிறுவனமான, பல்லேகெலேயில் உள்ள இலங்கை சர்வதேச பௌத்த கல்வியியற் கல்லூரிக்கு (சிபா கல்லூரி) மேற்கொண்ட
விஜயத்துடன் இப்பயணம் தொடங்கியது. அங்கு வருகை தந்த தூதுவர்கள், பௌத்த சித்தாந்தத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் இக்கல்லூரி மேற்கொள்ளும் செயற்பாடுகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். கண்டி எசல பெரஹேரவின் வரலாற்று, மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்த விளக்கக் கூட்டத்திலும் தூதுவர்கள் கலந்துகொண்டனர். கலாச்சார நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம அறங்காவலரால் உபசரிக்கப்பட்ட பாரம்பரிய இரவு விருந்து, கண்டி காலத்தின் மரபுகள் மற்றும் விருந்தோம்பலால் ஈர்க்கப்பட்ட ஓர் அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்கியது.
ஆகஸ்ட் 27 அன்று, தூதரகப் பிரதிநிதிகள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தந்து, அங்கு பாரம்பரிய தேவாவ நிகழ்வைக் கண்டுகளித்தனர். இத்தூதுக்குழுவினர், சர்வதேச பௌத்த அருங்காட்சியகம், யானைக் கொட்டகைகள் மற்றும் எஹெலபோல வளாகம் உள்ளிட்ட, கோயில் மற்றும் கண்டியுடன் தொடர்புடைய வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட்டனர்.
வருகை தந்த தூதுவர்களுக்கு இலங்கையின் சமையல் மரபுகளையும், விருந்தோம்பலையும் மேலும் அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் எஹெலபொல வளாகத்தில் ஒரு பாரம்பரிய மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் மிக முக்கியமான மத மற்றும் கலாச்சார ஊர்வலங்களில் ஒன்றான மாபெரும் ரந்தோலி பெரஹேராவைக் கண்டுகளித்தமையானது இந்த வருகையின் சிறப்பம்சமாக அமைந்தது. ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் கண்டி இராச்சியத்துடன் தொடர்புடைய பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய நடனக் கலைஞர்கள், மேளக்காரர்கள், சடங்கு கலைஞர்கள் மற்றும் யானைகள் இடம்பெற்றிருந்த அந்த ஊர்வலத்தின் பிரம்மாண்டத்தை வருகை தந்த தூதுவர்கள் அனுபவித்தனர்.
இச்சஞ்சாரத்தில், பேராதனை அரச தாவரவியல் பூங்காவிற்கான பயணமும் அடங்கும்; அங்கு அதன் முக்கியத்துவம் குறித்து தூதுக்குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஹந்தானயில் உள்ள சிலோன் தேயிலை அருங்காட்சியகத்தில், சிலோன் தேயிலையின் வரலாறு மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில், இலங்கையில் அங்கீகாரம் பெற்ற தூதரகப் பிரதிநிதிகளை ஈடுபடுத்தும் அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு நாட்டின் மத மரபுகள், கலாச்சாரப் பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் சுற்றுலாத் தளங்களை நேரடியாகக் காணும் வாய்ப்பை வழங்குவதன் மூலம், தனித்துவமான மற்றும் பன்முக கலாச்சார அடையாளத்தைக் கொண்ட ஒரு இடமாக இலங்கையின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்துவதை இந்நிகழ்ச்சித் திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01





