யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, 10வது சீனா-தெற்காசிய கண்காட்சி மற்றும் 7வது சீனா-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் கலந்துகொள்வதற்காக, 2026 ஜூன் 10 முதல் 13 வரையில், சீனாவின் யுனான் மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது, யுனான் மாகாணத்துடனான உறவுகளை, குறிப்பாக வர்த்தகம், சுற்றுலா, கல்வி, தொழிற்துறை ஒத்துழைப்பு, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர தொடர்ச்சியான அதிகாரபூர்வ சந்திப்புத் தொடர்களில் ஈடுபட்டார்.
ஜூன் 10 அன்று, பிரதி அமைச்சர் யுனான் நோமல் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, கல்வி ஒத்துழைப்பு, கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் நிறுவனக் கூட்டாண்மைகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். யுனான் மாகாண ஆளுநர் வெங் யூபோ, பிரதி அமைச்சர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களை வரவேற்குமுகமாக விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
ஜூன் 11 ஆம் திகதி, பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் சீனா-தெற்காசிய கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, இலங்கையின் ஏற்றுமதித் திறன், கலாச்சார பாரம்பரியம் மற்றும் சீனாவுடனும் பரந்த தெற்காசிய பிராந்தியத்துடனும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பெற்ற இலங்கை அரங்கத்தைத் திறந்து வைத்தார். அன்றைய தினம் பிற்பகுதியில், சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் நடைமுறை ஒத்துழைப்புக்கான ஒரு பிராந்திய தளமான சீனா-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் அவர் உரையாற்றினார். தனது உரையில், பிராந்திய ஒத்துழைப்பு, இணைப்பு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி மற்றும் மக்கள் சார்ந்த அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சீனா-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தின் ஒரு பகுதியாக, பிரதி அமைச்சர், வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் நுயென் சின் நட் டேனை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்டப் பரிமாற்றங்களின் விளைவுகளையும், அதன் விளைவாக மேம்பட்ட இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் பிரதி அமைச்சர் நினைவு கூர்ந்தார். இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் வியட்நாமின் உறுதிப்பாட்டை பிரதி அமைச்சர் நுயென் சின் நட் டேன் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜூன் 12 அன்று, பிரதி அமைச்சர் யுனான் மாகாணத்தின் பிரதி ஆளுநர் சூ ஹாவோவுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் கூட்டாண்மைக்கான நடைமுறைத் துறைகளை ஆராய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. அவர் மேற்கொண்ட காலா ஆய்வு விசயங்களில் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி ஆலை மற்றும் கேபிள் உற்பத்தி ஆலை ஆகியவற்றுக்கான வருகைகளும் அடங்கும். இவ்விஜயங்கள் தொழிற்துறைசார் வளர்ச்சி மற்றும் தொழிற்துறைசார் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்த புரிதலை வழங்கின.
ஜூன் 13 அன்று, பிரதி அமைச்சர் 10வது சீனா-தெற்காசிய கண்காட்சியைப் பார்வையிட்டார். அங்கு அவர் கண்காட்சியாளர்களுடன் கலந்துரையாடி, இலங்கைத் தயாரிப்புகளுக்கான சந்தை அணுகலை மேம்படுத்த ஊக்குவித்தார். மேலும், இலங்கையின் ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தும் வகையில், அவர் CGTN நேர்காணல் மற்றும் தயாரிப்புக் காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சீனாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் பரந்த சூழலில், யுனான் மாகாணத்துடனான இலங்கையின் கூட்டாண்மையை இவ்விஜயம் மேலும் வலுப்படுத்தியது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஜூன் 22

