வியட்நாம் மற்றும் ஏனைய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பௌத்த யாத்ரீகர்களை ஈர்க்கும் நோக்கில், “புத்த வந்தனா” என்ற பிரத்தியேக பௌத்த யாத்திரைத் தொகுப்பானது, வியட்நாமிலிருந்து நேரடி விமானங்கள் வந்திறங்குவதையொட்டி, ஜூலை 16 ஆம் திகதி கொழும்பில் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் முன்மொழியப்பட்ட இம்முன்முயற்சி, கிராமங்கள் மற்றும் சமூகங்களுக்கு யாத்திரைகளை ஊக்குவிப்பதன் மூலமும், உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் பரந்த அளவிலான பொருளாதார நன்மைகளை உருவாக்குவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் கொள்கையையும் இது முன்னெடுத்துச் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இலங்கைச் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (SLTPB) தலைவர் திரு. புத்திக ஹேவாவசம், நாட்டின் பொருளாதார மீட்சிக்கு சுற்றுலாத் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்தார். கடந்த ஆண்டில் உள்நோக்கிய சுற்றுலா மற்றும் வெளிநோக்கிய சுற்றுலா ஆகிய இரு துறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதனூடாக, வியட்நாமுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள தொடர்புகள் வளர்ச்சி கண்டுள்ளதையும் அவர் வலியுறுத்தினார். பௌத்தப் பாதை போன்ற முன்னெடுப்புகள், வியட்நாமில் சிறந்த சந்தை அணுகலை மேம்படுத்துவதோடு, இலங்கையின் சுற்றுலா மற்றும் கலாச்சார ஈர்ப்புகளைப் பன்முகப்படுத்தவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர், கௌரவ ட்ரின் தி டேம் அவர்கள், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டியதோடு, இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்தில் இன்னும் பல துறைகளுக்கு விரிவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வியட்நாம் சந்தையில் பௌத்தப் பாதை அறிமுகப்படுத்தப்பட்டதை அவர் வரவேற்றதோடு, இத்தகைய பன்முகப்படுத்தலானது, தனது நாட்டில் பாரியதொரு சந்தையைச் சென்றடையும் என்றும் எடுத்துரைத்தார்.
சென்ட் எண்ட்ரூ டிராவல் நிறுவனத்தின் தலைவர் திரு. மஹேன் காரியவசம், "புத்த வந்தனா" - பௌத்த யாத்திரைத் தொகுப்பைத் தொடங்க உதவிய இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயண நடத்துநர்கள் சங்கம் (SLAITO) மற்றும் சுற்றுலாவில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சங்கம் (ASMET) ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பாராட்டினார். இம்முன்முயற்சி, பௌத்த யாத்திரை மற்றும் கலாச்சார சுற்றுலாவிற்கான முதன்மையானதொரு இடமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்துவதற்கான மற்றுமொரு முக்கிய படியாக விளங்குகிறது.
வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையேயான நேரடி விமானங்கள் 2026 ஆகஸ்ட் 18 முதல் தொழிற்படவுள்ளமையானது, இரு நாடுகளுக்கும் இடையே பொருட்கள், சேவைகள் மற்றும் மக்களுக்கிடையிலான வினைத்திறன்மிகு பரிமாற்றத்தை எளிதாக்கும்.
வெளிநட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2026 ஜூலை 16




