வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு வின்ஸ்டன் பீட்டர்ஸ் அவர்களின் அழைப்பின் பேரில், 2026 மே 26 முதல் 31 வரை நியூசிலாந்துக்கு உத்தியோகப்பூர்வப் பயணமொன்றை மேற்கொண்டார்.
நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர்ஸ், அதிகாரிகள், தூதரக உறுப்பினர்கள் மற்றும் இலங்கைச் சமூகத்தினர் முன்னிலையில், அமைச்சர் ஹேரத் அவர்களால் வெலிங்டனில் உள்ள இலங்கை உயரஸ்தானிகராலயம் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு இப்பயணத்தின் முக்கிய அம்சமொன்றாகும்.
நியூசிலாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ஹேரத்துக்கு பாரம்பரிய மாவோரி போவிரி சடங்குமுறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸுடன் விரிவான இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம் மற்றும் பாலுற்பத்திக் கூட்டாண்மை, கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட இருதரப்பு நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான கலந்தாய்வுகளில் ஈடுபட்டனர். இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவை மேலும் வளர்ப்பதற்கான தங்கள் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (TIFA) உட்பட பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு அமைச்சர்களும் இணங்கினர்.
இப்பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத், நியூசிலாந்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கௌரவ கெரி ப்ரௌன்லீ, சுற்றுச்சூழற்துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான இராஜாங்க அமைச்சர், பெண்கள் நலத்துறை அமைச்சர் மற்றும் விபத்து இழப்பீட்டுக் கூட்டுத்தாபனத்தின் இணை அமைச்சர் நிக்கோலா க்ரிக், விவசாயத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அலுவல்களுக்கான இணை அமைச்சர் டொட் மெக்ளே, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத்துறை அமைச்சர் மார்க் மிஷெல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பெனி சைமண்ஸ் ஆகியோருடன், நிகழ்த்திய சந்திப்புகளில், இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பல்வேறு துறைகளில் மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் ஹேரத், தொழிலாளர் கட்சியின் வெளிநாட்டு அலுவல்களுக்கான பேச்சாளர் வனுஷி வோல்டர்ஸ் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட்டின் பிரதித் தலைவர் கெவின் மெலோய் ஆகியோரையும் சந்தித்தார். அவர், விவசாயத்துறையில் பச்சைவீட்டு வாயுக்கள் குறித்த உலகளாவிய ஆராய்ச்சிக் கூட்டமைப்புடன் ஒரு கலந்துரையாடல் அமர்வில் ஈடுபட்டதுடன், ஆசிய நியூசிலாந்து நிதியத்துடன் ஒரு வட்டமேசை விவாதத்தில் பங்கேற்றார்.
ஓக்லாந்தில் வணிக மேம்பாட்டிற்கான தனது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, அமைச்சர் நியூசிலாந்தின் முக்கிய வணிகப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஓக்லாந்து வர்த்தக சபையில் உரையாற்றினார், மேலும் 'ஃபோன்டெரா' நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைப் பார்வையிட்டார். அவரது கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சிகளில், ஓக்லாந்து பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகத்தினருடனான சந்திப்புகள் மற்றும் லிங்கன் பல்கலைக்கழகத்திற்கான விஜயம் ஆகியவை அடங்கும்.
கிறிஸ்ட்சர்ச் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவிடத்தில், கிறிஸ்ட்சர்ச்சின் பிரதி ஆளுநர் விக்டோரியா ஹென்ஸ்டொக் உடன் இணைந்து, அமைச்சர் 'மலர் அஞ்சலி செலுத்தும்' சடங்கு நிகழ்வில் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தின் போது நடைபெற்ற விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் உருவாக்கப்பட்ட நேர்மறையான உத்வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உணர்ந்தனர். மேலும், அமைச்சர் ஹேரத்தின் நியூசிலாந்து விஜயம் மற்றும் அதி கௌரவ வின்ஸ்டன் பீட்டர்ஸ் அவர்கள் 2025 இல் மேற்கொண்ட இலங்கைக்கான விஜயம் ஆகியவற்றினால் ஏற்படுள்ள நேரிய விளைவானது இலங்கை-நியூசிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக அமைவதின் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு,
கொழும்பு
2026, ஜூன் 2

